Pages

Saturday, October 29, 2011

எனக்கு ஹிந்தி தெரியும்!

இன்றுதான் எனது ஃபேஸ்புக் கணக்கில் தெரிந்த மொழிகள் கட்டத்தை பூர்த்தி செய்தேன். கொஞ்சம் வேகமாகப் பேச முயற்சி செய்தால் ஆங்கிலமே நமக்கு டிமிக்கி காட்டி ஓடும். ஆனாலும் தமிழ், ஆங்கிலம் தவிர எனக்கு இன்னொரு மொழியும் தெரியும் என்று காட்டிக் கொள்வதில் ஒரு குரூர சந்தோஷம். அதனால், ஹிந்தி என்று மூன்றாவதாக ஒரு மொழியைக் குறிப்பிட்டு (கேட்டுப் புரிந்து கொள்ள மட்டும்) என்று ஒரு ப்ராக்கெட்டை கவனமாகப் போட்டு வைத்தேன்.

என்னுடைய ஹிந்தி அறிவை அவ்வப்போது நான் ஹிந்தி தெரியாத அப்பாவிகளிடம் காட்டுவதுண்டு. நீங்க ஹிந்தி படிச்சீங்களா? என்று அவர்கள் கேட்கும் போது, இல்லை எல்லாமே தூர்தர்ஷன் பார்த்து வந்தது என்று சொல்லி அவர்களை மேலும் புருவம் உயர்த்தச் செய்வதே என் ப்ளான்.

இந்தப் ப்ளானை விடலைப் பருவத்தில் நான் பிகர்களிடம் காட்டியிருந்தால் தேவலை. ஒருமுறை இண்டர்வியூவுக்குப் போயிருந்த இடத்தில் காட்டினேன். அது என் வாழ்வின் பார்ட் டைம் வேலை படலம். ஏற்கெனவே ஒரு ஷாப்பிங் மாலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான் புரசைவாக்கம் சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட்டுக்கு இண்டர்வியூவுக்காகப் போயிருந்தேன்.
தமிழ் இலக்கியம் படிக்கிறவன் என்பதால், எனக்கு மரியாதை கொடுத்துப் பேசிய அந்த மேலதிகாரிக்கு என் ரெஸ்யூமில் ஹிந்தியைப் பார்த்துவிட்டு பெருத்த அதிர்ச்சி!

do you Know hindi? என்றார் அவர்.

yes sir.. little bit! என்றேன் நான்

அப்ப நீங்க ஹிந்தியில நல்லா பேசுவீங்க..? என்றார் ஹிந்தியில்!

நான் அலர்ட் ஆகி, no sir.. i cant speak. but i can communicate in hindi என்றேன். அந்த வார்த்தைகளை அவர் ரசித்தார்.

அப்போ ஹிந்தியை முறையா கத்துக்கலை.. அப்புறம் எப்படி ’கம்யூனிகேட்’ பண்றீங்க? என்றார்.

’எல்லாம் நம்ம தூர்தர்ஷன் புண்ணியத்துலதான் சார். ஹிந்தி படம் பார்க்கும் போது விளம்பரங்களை எல்லாம் ஹிந்தியில போடுவாங்க. அதுவே ஞாயிற்றுக் கிழமை தமிழ்ப்படம்னா அதே விளம்பரங்களை தமிழ்ல டப் பண்ணிப் போடுவாங்க. எந்த வார்த்தைகுக் என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்கலாம்.” என்றேன்.

’’ஹிந்தி படங்களைப் பாருங்க இன்னும் நல்லா தெரிஞ்சுக்கலாம்” என்று ஆலோசனை சொன்னார் அவர்.

’’இல்ல சார்.. நான் நிறைய ஹிந்திப்படம் பார்த்துட்டேன். இதுவரைக்கும் ஒரு சில வாக்கியங்கள்தான் மனசுல நின்னுருக்கு.”
அப்படியா? அது என்ன வாக்கியம்? என்று அவர் கேட்டதும் தைரியமாக அடுக்கினேன்.

’’தூ.. பொகோத் ஹுப்சூர்த்தி ஹூ(ன்)” = நீ ரொம்ப அழகா இருக்கே
’’மே(ன்) தும்ஸே ப்யார் கர்த்தா ஹூ(ன்)” = நான் உன்னை காதலிக்கிறேன்
’’மே தும்ஸே ஷாதி கர்னா சாத்தா ஹூ(ன்)" = நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்
- அவர் ஒரு பெண் அதிகாரியாக இருந்திருந்தால் என் வாயில் ஒன்று விட்டிருப்பார். ஆணாக இருந்ததால் வாய் விட்டு சிரித்தார்.
சிரித்துவிட்டு, ’’நீங்க தூர்தர்ஷன்லயேதான் படம் பாக்கறீங்கனு நினைக்கறேன். இப்போதைய படங்கள் எதுலயும் இதெல்லாம் சொல்றதில்லை” என்றார்.

’’இப்போதைய படமும் ஒண்ணு பார்த்தேன் சார்.. அதுலயும் ஒரே டயலாக்தான் திரும்பத் திரும்ப வருது..:”

’’என்ன அது?”

’’மே(ன்) உஸ் குத்தே கோ ஜான்ஸே மார்டாலூங்கா” (நான் அந்த நாயை (அதாவது, வில்லனை) கொலை பண்ணப் போறேன்!)
இன்று வரை இந்திய சினிமாவின் நிலை இதுதான் என்று நினைக்கிறேன்!

Monday, January 31, 2011

Flash Back

அந்தக் காலத்துல..

என்று ஆரம்பித்து சில நினைவுகளை அசை போடுவது சில பேருக்கு முதுகு சொறிவது போன்றது. (i.e) இதமான சுகானுபவம்!

அப்போவெல்லாம் கூவத்துல ‘போட்டு’ போவும் தெரியுமா?
அந்தக் காலத்துல சைதாப்பேட்டையெல்லாம் அவுட்டராம்! - புரணி பேசும் கிராமத்துப் பெண்கள் கணக்காக, நம் தாடையைப் பிடித்து அங்கலாய்க்கச் செய்யும் இப்படிப்பட்ட நினைவுகள் பலப்பல!

அப்படிப்பட்ட அங்கலாய்ப்பைத்தான் தூண்டியது 1987-ம் ஆண்டைச் சேர்ந்த இந்த தினத்தந்தி! வருங்காலச் சந்ததிகள் பார்த்துப் பரவசப்படுவதற்காக யாரோ பத்திரமாக  எடுத்து வைத்த பேப்பர் அல்ல இது. 1987-ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்ட முருகன் பட ஃப்ரேமில் ஸ்டஃப் செய்யப்பட்டிருந்த பேப்பரே இந்த பொக்கிஷம்!

தங்கம் விலை ரூ. 2,192!
சைதை போரூர் சாலையில் முக்கால் கிரவுண்ட் வீட்டு மனை, ரூ. 4,770!
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியை மூடக் கூடாது! - முதல்வர் எம்.ஜி.ஆர், பிரதமர் ராஜிவ்காந்திக்குத் தந்தி!
இலங்கைக்கு இந்தியா கண்டனம்! - தமிழர்கள் மீதான ராணுவ நடவடிக்கையால் கடும் விளைவுகள் ஏற்படும்!
இப்படிப்பல அந்தக் கால செய்திகள் இதோ.. நீங்கள் 24 வருடங்கள் பின்னோக்கிப் போவதற்காக!

நன்றி: S.P.C Kalyana Mandapam, Padi, Chennai - 50.

Thursday, January 13, 2011

கமலஹாசனாழ்வார்! பார்ட் 2

தமிழ்நாட்டில் பெரும்பாலான பிராமணர் அல்லாத இந்துக்கள், இந்து மதம் என்பதை ஒரே மதமாகத்தான் பார்க்கிறார்கள். கிறிஸ்துவர்களுக்கு பைபிள், இஸ்லாமியர்களுக்கு குர்-ஆன்.. என்பது போல, இந்து மதத்துக்கு பகவத் கீதை என்று இன்றும் நம்பிக் கொண்டிருக்கும் அறியாமை நம்மிடையே உண்டு. ஆனால், சிவனை வழிபடும் ஒரு வைதீக சைவ பிராமணரிடம் போய், ‘கீதைதானே நமக்கெல்லாம் புனிதநூல்’ என்று சொல்லிப் பாருங்களேன்.. அவர் முகம் போகும் போக்கு உங்களுக்கு ஆயிரம் கதைகளைச் சொல்லும்.இந்தப் பதிவுக்காகவே நான் பல சைவ பிராமணர்களிடமும்(அய்யர்) வைணவ பிராமணர்களிடமும் (அய்யங்கார்) தனிப்பட்ட முறையில் பேசினேன். சர்க்கரையில் இட்ட ரவை போல் நம் கண்ணுக்குத் தெரியாமலேயே இன்று வரை சைவ வைணவ பேதம் நம் ஊரில் பாராட்டப்படத்தான் செய்கிறது என்பதை அவர்கள் அனைவருமே ஊர்ஜிதம் செய்தார்கள். ஆனால், இலைமறை காயாக நிலவும் இந்த வெறுப்பை சரித்திர உதவியோடு வெகுஜனங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய புனிதக் காரியத்தைச் செய்தது ‘தசாவதாரம்’!


வாலி என்கிற வைணவர் எழுத, கமல் என்கிற வைணவர் நடித்த அந்தப் பாடல் வரிகள், ”அட்டரட்சரம் ஏற்கும் உள்ளம் பஞ்சரட்சரம் பார்க்காது!” என்று உக்கிரமாக - பட்டவர்த்தனமாக சைவ எதிர்ப்பை முன் மொழிந்தது. ஆனால், இது சரித்திரம்தான்! இன்றிருக்கும் நிலை இல்லை என்று கதையில் தெளிவாகச் சொல்லிவிட்டதால் வெளிப்படையான விமர்சனங்களில் இருந்து அவர் தப்பித்துக் கொண்டார். ஆனால், மறைமுகமான விமர்சனங்கள் கமலின் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் எழத்தான் செய்கிறது. குறிப்பாக வைதீக சைவர்களிடமிருந்து!


”என்னப்பா இது அநியாயமா இருக்கு! இவங்கதான்(அய்யங்கார்கள்) ஆசாரம் மடினு நிறைய பார்ப்பாங்க. நம்மளையெல்லாம் கூட பிராமணன்னு ஏத்துக்க மாட்டாங்க. ஆனா, படத்துல பாரு.. என்னவோ அவுங்க எல்லாம் அப்பாவி மாதிரியும் சிவனை கும்பிடுறவங்க எல்லாம் கொடூரமானவங்கன்ற மாதிரியும் கிளப்பி விடுறான் இந்தக் கமல்!”

மேற்படி தசாவதாரத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலையும் அதற்கு முந்தைய ராஜராஜசோழன் குறித்த காட்சிகளையும் பார்த்துவிட்டு எனது சைவ நண்பர் ஒருவர் சொன்ன கமெண்ட் இது.


”இன்னிக்கு அய்யருங்கல்லாம் எல்லா கோயிலுக்கும் போறாங்கப்பா! ஏன் சிவன் விஷ்ணு கோயில்னு கூட கட்டுறாங்க. இப்பிடியே நடந்து பார்த்தசாரதி கோயிலுக்குப் போ.. அங்க எத்தனை பேரு விபூதி வச்சுக்கிட்டு வர்றாங்கனு நீயே பார்க்கலாம். நாங்கல்லாம் சிவன் விஷ்ணுன்ற பேதம் பார்க்கறது இல்ல. ஆனா, அய்யங்காருங்க இப்பவும் பார்க்கறாங்க. அவங்கள்ல எத்தனை பேரு சிவன் கோயிலுக்கு வந்து சாமி கும்பிடுறாங்கனு எண்ணிப் பாரேன். ரொம்ப ரொம்ப கம்மி! அவங்க குரோதம் புடிச்சவங்கப்பா” -இன்னொரு சைவ நண்பர் சொன்ன தகவல் இது.


உண்மையில் தசாவதாரத்தில் வருவது போல அப்பாவி வைணவர்களிடம் சைவர்கள் பகைமை பாராட்டினார்கள் என்பது உண்மையா? அல்லது இன்று அப்பாவி சைவர்களிடம் வைணவர்கள் மனக் கிலேசத்துடன் பழகுகிறார்கள் என்பது உண்மையா? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இரண்டுமே உண்மைதான் என்பது தெரிய வருகிறது.
அந்தக் காலத்தில் பகைமை பாராட்டியது சைவர்கள். இந்தக் காலத்தில் பகைமை பாராட்டுவது வைணவர்கள். இந்த இரண்டு பகைமை பாராட்டுதல்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஈழத்தில் அநியாயமாகக் கொன்று குவிக்கப்படும் உயிர்களை நேரடியாகப் பார்த்துப் பரிதவித்த ஒருவனின் தலைமுறையில், எட்டாவது வாரிசு கூட ஒரு சிங்களனோடு உண்மையாக நட்பு பாராட்ட முடியாது அல்லவா? அப்படியோரு பகைமை உணர்ச்சிதான் இன்றைய வைணவர்களிடமும் இருக்கிறது.


ஓவர் டூ.. 12ம் நூற்றாண்டு..


உலக நாடுகள் பலவும் பக்கத்து நாடுகளை எப்படி அபகரிக்கலாம் என்று துடித்தபடி போரிட்டுக் கொண்டிருந்த காலத்தில், தமிழக மன்னர்கள் தம் மக்களையும் மதங்களையும் வைத்து உள்நாட்டு அரசியல் செய்துகொண்டிருந்தார்கள். ’மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி’ என்பது காலம் காலமாய் நம் ஊரில் சொல்லப்பட்ட சொலவடை. இங்கே.. வழி என்பது மார்க்கம், சமயம், மதம் என்று பொருள்படும். வெளிமாநிலங்களில் இருந்து (அப்போது வெளிநாடு) இறக்குமதியாகும் மதங்களை அன்றைய மதவாதிகள் முதலில் மன்னர்களுக்குத்தான் புகட்டினார்கள். அதன் பின் தன் குடிமக்கள் எல்லோருக்கும் அந்த மதத்தை அவனே போதிப்பான். அல்லது, மதம் மாறியே தீர வேண்டும் என்று சாதிப்பான்.தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட காலம் இப்படி ஒரு மோசமான காலகட்டம் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன், 800 வருடங்கள் என்பது ஒன்றும் பெரியதல்ல. இன்றைய வைதீக வைணவர்களிடம் கேட்டால் கூட சோழ மன்னர்களின் கொடுங்கோன்மை பற்றி செவி வழிச் செய்திகள் நிறையக் கிடைக்கின்றன. 12ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காஞ்சி கயிலை நாதர் கோயில்தான் ’பெரிய கோயில்’ என்று வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெருமையைத் தஞ்சைக்குத் தர வேண்டும் என்ற ஈகோதான் அந்தக் கோயிலுக்கே அடித்தளம்!


’’இன்றைக்கும் அந்தக் கோயில் விளங்காம கிடக்குறதுக்கு(இது என் கருத்தல்ல!) காரணம் என்ன தெரியுமா? அந்தக் காலத்துல எல்லாரையும் சிவனைக் கும்பிடுனு கட்டாயப்படுத்தினதும், மறுத்தவனை கொன்னதும், ஊரை விட்டுத் துரத்தினதும்தான். இந்தப் பாவமெல்லாம் சும்மா விடுமா? கோயில் கட்டின சிற்பிகள் கூட வேற எங்கேயும் இதே மாதிரி சிற்பங்களை செஞ்சுடக் கூடாதுனு வேலை முடிஞ்சதும் அவங்க கைகளை வெட்டிடுவாங்களாம்! அந்தக் கோயிலே பாவங்களால கட்டப்பட்டது! அதனாலதான் இன்னிக்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அங்கே போனா, பெரும் பிரச்னைகளை சந்திக்கிறாங்க!” - இது இன்னொரு அய்யங்கார் நண்பனின் அப்பா தந்த ஆரூடம்!


ராஜராஜசோழன்தான் கொடியவன் என்றில்லை. 6-ம் நூற்றாண்டிலேயே தம் குடிமக்களை மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்திய பாண்டியர்கள் இருந்திருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் திருஞானசம்பந்தர், கூன் பாண்டியன் என்ற மன்னனின் வெப்பு நோயை குணப்படுத்தி அவனை சைவராக மாற்றினார் என்றும், அதே திருஞான சம்பந்தர் ஆயிரம் சமணர்களை வாதத்தில் வென்று அவர்களை கழுவில் ஏற்றினார் (மரண தண்டனை) என்றும் இலக்கியக் குறிப்புகள் உள்ளன.


நம் வரலாறாக நமக்கு அறியக் கிடைத்திருக்கும் முதல் காலகட்டம், கிமு 2 முதல் கிபி 2-ம் நூற்றாண்டு வரையிலான சங்க காலம்தான். அதில் இருந்து தமிழகத்தின் மத வரலாற்றுக்கு வருவோமே! சங்க காலத்தில் தமிழகத்தில் சைவம், வைணவம் இரண்டுமே ஆட்சியில் இருந்ததாகத் தெரியவில்லை. ஊர்ப் பெரியவர்களை அழைத்து உளுந்தங்களி செய்து விருந்து படைத்துத்தான் திருமணங்கள் நடந்ததாக சான்றுகள் உள்ளன. இறந்தவர்கள் எரிக்கப்படவில்லை... புதைக்கப்பட்டார்கள். அந்தக் கல்லறை வழிபாடு (நடுகல்) இருந்திருக்கிறது. மற்றபடி தமிழ்க் கடவுளான முருகன், அம்மை, அப்பன் என்ற முகம் தெரியாத கடவுள்கள், கொற்றவை என்ற உக்கிரக் கடவுள், இந்திரன் என்ற காவல் தெய்வம் எல்லாம் இருந்திருக்கிறார்கள். இப்போது இவர்கள் எல்லாம் இந்து மதப் புராணங்களோடு சேர்த்துப் புனையப்பட்டுவிட்டார்கள். அல்லது சிறு தெய்வங்களாக தனியே விடப்பட்டுவிட்டார்கள்.இந்தக் காலத்தில்தான் சைவம் வைணவம் என்ற வடக்கத்திய மதங்கள் இங்கே நுழைகின்றன. பிராமணர் மந்திரம் சொல்ல, அக்கினியை வலம் வந்து செய்யப்பட்ட முதல் வைதீகக் கல்யாணம் கோவலனுக்கும் கண்ணகிக்கும் இடையே நடக்கிறது. அந்த நேரத்தில்தான் அந்தச் சடங்குகள் எல்லாவற்றையும் எதிர்த்து பௌத்த, சமண மதங்கள் பேசுகின்றன. அவை மக்களிடையே செல்வாக்கும் பெறுகின்றன.சமண, பௌத்த மதங்களின் மக்கள் செல்வாக்குக்கு பல காரணங்களைச் சொல்லலாம். அதில் முக்கியமானது கொல்லாமை தத்துவம். மன்னர்கள் தங்கள் கவுரவத்துக்காக, பெருமைக்காக நடத்தும் போர்களில் எண்ணற்ற உயிர்கள் சேதப்படுவதை, நிச்சயம் எந்தக் காலத்திலும் மக்கள் விரும்பியிருக்க மாட்டார்கள். அந்தக் காலத்து சமணமும் பௌத்தமும் அன்பை போதித்தது. அவை புதிதாக எந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மக்களிடையே திணிக்கவில்லை. மாறாக, சமீபத்திய திணிப்பாக மக்களை வருத்திய சடங்குகளை வேண்டாம் என்றன. இந்த அப்ரோச் மக்களுக்குப் பிடித்திருந்தது. மன்னர்களுக்கும் பிடித்திருந்தது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் அரசியல் - இலக்கிய நிலை எப்படி இருந்தது என்று அறிய சரியான சான்றுகள் இல்லை. அதனால்தான் இது இருண்ட காலம். ஆனால், ’பிற்காலத்தில் இந்த சமண, பௌத்த மதங்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த சைவ, வைணவ மதங்கள், வேண்டுமென்றே இந்தக் காலகட்டத்து ஆவணங்களை அழித்துவிட்டன” என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியொரு இன அழிப்பு தவறில்லையா? என்ற ரீதியில் நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தபோது, ’’அந்த மதங்கள் எல்லாம் ஆரம்பத்தில் அன்பைத்தான் போதிக்கும். பிறகு ஆட்சியாளர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு நினைத்ததை எல்லாம் சாதிக்கும். அவற்றை அழிக்கவில்லையென்றால், இலங்கையைப் போல தமிழகத்திலேயே தமிழக மக்கள் அகதிகளாகியிருக்கலாம்!” என்றார் அவர். இது அர்த்தமுள்ள அனுமானமாகவே எனக்குப் பட்டது.சமண, பௌத்த மதங்களுக்கு எதிராக முதன்முதலில் வீறுகொண்டு எழுந்தது சைவ மதம்தான். அப்பர், சம்பந்தர், சுந்தரர் போன்ற ஆன்மிகவாதிகள் அன்று போர்க்கால அடிப்படையில் சுற்றிச் சுழன்று பணியாற்றியிருக்கிறார்கள். நாடே சமணத்தின் வழியில் சென்று கொண்டிருந்தபோது, சைவ மதம் தன்னைப் பரப்பிக் கொள்ள இரண்டு ஆயுதங்களைக் கையில் எடுத்தது. ஒன்று இலக்கியம்.. மற்றொன்று மருத்துவம். வெகுஜனங்களை இலக்கியம் வழியாகவும் மன்னர்களை சிறந்த சித்த வைத்திய முறைகள் வழியாகவும் கவர்ந்திருக்கிறது சைவ மதம். கூன்பாண்டியன்.. வெப்பு நோய் மேட்டரெல்லாம் நடந்தது இந்தக் காலகட்டத்தில்தான். அப்பர் என்கிற திருநாவுக்கரசரே கூட தன் சூலை(அல்சர்) நோயை குணமாக்கியதால்தான் சைவ மதத்தைத் தழுவுகிறார்.அப்போது துவங்கிய சைவ மத எழுச்சி, தமிழ்நாட்டில் இன்று வரை குறையவே இல்லை எனலாம். இமயமலையை மெயின் பிரான்ச் ஆகக் கொண்ட சிவனை ’தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று  மொழி மாற்றினார்கள். சமணம் போதித்த துறவு நெறிக்கு எதிராக ஆன்மிகத்தை வளைத்தார்கள். இந்தக் காலகட்டத்தில் எழுந்த இலக்கியங்கள் சிற்றின்பம் கலந்து எழுதப்பட்டன. சிற்றின்பம் வழியே ஆன்மிகக் கருத்துக்களை அவை புகுத்தின எனலாம். இன்னும் இன்னும் தங்கள் மதம் செல்வாக்குப் பெற வேண்டும் என்ற வெறியில், அன்றைய சைவர்கள் எதையும் செய்யத் தயாராக இருந்தனர். ‘அங்கமெல்லாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ வுரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே’ என்று ஜாதியைக் கூட விட்டுத் தந்தார்கள்.


ராஜராஜசோழன் 

வைணவம் சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு திண்டாடியபோது, தமிழைக் கையில் எடுத்தது சைவம். 2-ம் நூற்றாண்டு முதல் மக்களின் பண்பாட்டோடு ஊறிப் போன ராமாயணம், மகாபாரதம் போன்ற வைணவ புராணங்களுக்கு நிகராக சிவபெருமானின் திருவிளையாடல்களை தமிழில் சுவைபட எழுதினார்கள் சைவர்கள். பெரிய புராணம் எழுதிய சேக்கிழார், தான் ஏன் இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்ற விளக்கமாக முன்னுரையில், ‘பரசமயத் தருக்கொழிய’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்துகிறார். ஆக, சமணம், பௌத்தம் ஆகிய இரண்டையும் பரசயமாக.. வெளியிலிருந்து வந்த இறக்குமதியாகப் பார்த்திருக்கிறார்கள். வைணவம் ஒரு ’உள்நாட்டு மதம்’ என்ற ரீதியில் லேசாக நட்பு பாராட்டியிருக்கிறார்கள். அப்போதுதான், சிவன் பற்றிய புராணங்களில் கொஞ்சம் கொஞ்சம் விஷ்ணுவும் எட்டிப் பார்த்திருக்கிறார். சைவம் - வைணவம் இணைந்த இந்து மத உருவாக்கம் அப்போதுதான் தமிழகத்தில் நடந்திருக்கிறது. ஆனால், சிவ புராணங்களில் வரும் விஷ்ணு பலம் குறைந்தவராகவும்.. சிவனை வணங்குபவராகவுமே இருப்பார். உதாரணத்துக்கு, சிவனின் அடியையும் முடியையும் காண விஷ்ணுவும் பிரம்மாவும் முயன்றதாகவும், விஷ்ணு பாதாளம் தாண்டிச் சென்றும் அதைக் காண முடியாமல் தோற்றுத் திரும்பியதாகவும் சொல்லப்படும் புராணத்தைச் சொல்லலாம்.


விஷ்ணுவுக்கு சக்கரம் தரும் சிவன்!

ஆனால், இப்படி சைவர்கள் தங்களை அவர்களோடு இணைத்துக் கொள்வதை வைணவர்கள் விரும்பவில்லை. அது, கருணாநிதி திருமாவளவனுக்கு சும்மா 2 சீட்டு கொடுத்து இணைத்துக் கொள்வதுபோலத்தான் என்ற உண்மை அவர்களுக்குப் புரிந்தது. அதன் பயனாக சிற்றின்பம் கலந்த அத்தனை சைவ இலக்கியங்களையும் தூக்கிச் சாப்பிடுவது போல ’கம்பராமாயணம்’ எழுந்தது. அதன் பிறகு வைணவம் வளர்த்த ஆழ்வார்களின் எழுத்து நடை, சைவ எழுத்து நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியது உண்மை. ஆனால், கம்பராமாயணமும் ஆண்டாள் பாசுரங்களும் மட்டுமே சைவ இலக்கியங்களுக்கு எதிராக தராசுத் தட்டைத் தாழ்த்தின.


அதுதான் 12-ம் நூற்றாண்டு. தமிழகத்தில் வேரூன்றியிருந்த சமண, பௌத்த மதங்களை அடையாளம் தெரியாமல் வெட்டி எறிந்த சைவ மதம், தன் சகோதரணுக்கு.. அதாவது, வைணவ மதத்துக்கு எதிராகத் திரும்பியது அப்போதுதான். அப்போது மக்களின் மதமாக வைணவமும் ஆட்சியாளர்களின் மதமாக சைவமும் இருந்திருக்கலாம். விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்.. அது ஒவ்வொன்றுக்கும் சொல்லப்படும் கதைகள் போன்றவை ஜனரஞ்சகமானவை. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில், கடவுளர்களின் அற்புதங்கள் குறைவாகவும் சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகள், அரசியல் சூழ்ச்சிகள் போன்றவை தூக்கலாகவும் இருக்கும். சைவத் திருவிளையாடல்களில் அமானுஷயயம் மட்டுமே இருக்கும். வைணவ இதிகாசங்களின் மனிதக் கதைகள், ஒரு மெகா சீரியலைப் போல அன்றைய மக்களைக் கவர்ந்திருக்கலாம்.இதனாலேயே, 12-ம் நூற்றாண்டில் வைணவர்கள் தமிழ்நாட்டுக்குள் இருக்கவே முடியாத அளவுக்கு ஒரு நெருக்கடி உருவாகியிருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை. விக்கிபீடியாவில் செல்வி ஜெயலலிதா என்ற பெயரைத் தேடிப் பாருங்களேன். ’சோழர் காலத்தில் ’ஏதோ நெருக்கடி’யால் தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு இடம்பெயர்ந்த வைணவக் குடும்பங்களில் ஒன்று அவருடையது” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது யாரோ ஒரு வைணவரால் திருத்தப்பட்டிருக்கலாம். ஆனால், செவிவழியாகச் சொல்லப்படும் உண்மைச் சரித்திரம் அது.(’’ஜெயலலிதா ஒரு வைணவர் என்பதால்தான் துணிந்து ஜெயேந்திரரைக் கைது செய்தார். கலைஞர்கூட அதைச் செய்திருக்க மாட்டார்” என்று ஆதங்கத்தோடு என்னிடம் ஒரு வைணவர் குறிப்பிட்டதுண்டு! ‘தசாவதார’த்தில் கூட ஒரு சீன் வரும்.. ’’இந்த மடத்துக்குள்ள நுழைய காஞ்சிபுரத்துல பர்மிஷன் கேட்கணுமா?” என்பார் பல்ராம் நாயுடு. ‘எங்களுக்குத் தலைவர் ஜீயர்தான். அவர்கிட்டக் கேக்கணும்’ என்பார் அங்கிருப்பவர். உண்மையில், வைணவர்கள் சங்கர மடத்தையே மதிக்க மாட்டார்கள். அவர்கள் ஜீயருக்குத்தான் கட்டுப்படுவார்கள் என்ற செய்தி, சாமானிய மக்களுக்கு ரொம்ப ரொம்பப் புதுசு. இதெல்லாம் இந்து மதம் என்ற மாயையைக் கட்டுடைக்கப் பெரிதும் உதவும்)

கலந்து செய்த கலவை நான்!

அதன் பிறகு சைவ மதம் வைணவத்தை உக்கிரமாக எதிர்த்துதான் வந்திருக்கிறது. சாமான்ய மக்களிடையே கூட, வைணவத்தை செயலிழக்க வைக்க முயற்சிகள் நடந்திருக்கின்றன. இதற்கு சில சொலவடைகளையே உதாரணமாகச் சொல்லலாம்..
’பிச்சை எடுத்தானாம் பெருமாளு.. அதைப் புடுங்கிட்டுப் போனானாம் அனுமாரு’ - வைணவப் புராணங்களைக் கிண்டலடிக்கும் சொலவடை!
‘ஈரப் பேனாக்கி பேனை பெருமாளாக்கிடுவே போலிருக்கே’ - வைணவ புராணங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று சொல்லும் சொலவடை!
‘கூரை ஏறிக் கோழி புடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போறானாம்!’ - ஆன்மா வைகுண்டத்துக்குப் போகிறது என்ற வைணவக் கொள்கையையே கிண்டலடிக்கும் சொலவடை!
’சங்கு சக்கர சாமி வந்து ஜிங்குஜிங்குனு ஆடிச்சாம்!’ - விஷ்ணுவின் தோற்றம் பற்றிய எள்ளல்!
’சாகும்போது சங்கரா சங்கராங்கறீயே’ - காலம் கடந்து சைவ மதத்துக்குத் திரும்புகிறவர்களை நக்கலடிப்பது!
‘அரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவன் வாயில மண்ணு!’ - பொதுவாக இது சைவ-வைணவ நல்லிணக்கத்தைச் சொன்னது போலத் தெரியும். ஆனால், விஷ்ணுவும் கூட சிவனின் வடிவம்தான் அதை உணர்ந்து திருநீறைப் பூசுங்கள். அதைவிட்டு திருமண்ணைப் புகழ்ந்துகொண்டுத் திரியாதீர்கள் என்றே இது பொருள்படும்.


இப்படிப்பட்ட ஜனரஞ்சகப் பிரசாரத்தின் பயனாக இன்று தமிழ் நாட்டில் வைணவம் என்பது கிட்டத்தட்ட ஒரு ஒடுக்கப்பட்ட மதமாகி விட்டது எனலாம். தமிழகத்தில் இருக்கும் சிவத்தலங்களுக்கு 10-ல் 1 என்ற விகிதத்தில்கூட வைணவத் தலங்கள் இல்லை. மக்களிடையே வைணவ இதிகாசங்கள் ஊறிப் போய்விட்டதால், மனிதர்களுக்கு வைக்கப்படும் பெயர்களில் வைணவம்தான் கோலோச்சுகிறது. ஆனால், வழிபாட்டில் இல்லை. அதற்கு மிக முக்கியமான காரணம், அய்யனார், கருப்பு, முனி போன்ற சிறு தெய்வங்களையும் கூட சிவனின் அம்சமாக பிற்கால சைவர்கள் சுவீகரித்துக் கொண்டதுதான். இன்று தெக்கத்தி கிராமத்தில் வசிக்கும் ’ராம’சாமிச் சேர்வை கூட அய்யனார் பேரைச் சொல்லி நெற்றி நிறைய விபூதி பூசிக் கொள்வார். ஆனால், அவருக்கு நெற்றியில் திருமண்(வைணவத்துக்குரியது) எழுதத் தெரியாது.


சுஜாதா, கமல் போன்றவர்கள் எழுதும் திரைக்கதையில் வேண்டுமானால், ’’பெருமாளே பெருமாளே” என்று ஜபித்துக் கொண்டு வரும். ஆண்டாள் அல்லது ராமானுஜர்கள் வரலாம். நடைமுறை வாழ்க்கையில் பார்த்தால், எண்ணிக்கையில் கூட அவர்கள் மிக மிகக் குறைவுதான். ஒருமுறை சுஜாதா ’கற்றதும் பெற்றதும்’ தொடரில் கமல் தன்னை மாமா என்று குறிப்பிடுவது போல எழுதிவிட்டார். அடுத்த வாரம் அவரிடம் ஒரு நண்பர், ”உண்மையிலேயே கமல் உங்களுக்கு மருமகனா?” என்று கேட்டாராம். அதற்கு அவர் சொன்ன பதில்.. '’All iyyangars are relatives!’'. எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாலும் யூதர்கள் போல.. ஈழத்தமிழர்கள் போல.. ஒரு இனப்படுகொலையைச் சந்தித்து மீண்டிருப்பதாலும் அவர்களுக்குள் ஒரு 'லிங்க்' எப்போதும் உண்டு!சரி, இவ்வளவு இருந்தும் வைணவர்கள் ஏன் இதைப் பெரும் பிரச்னையாக்குவதில்லை? காங்கிரஸுக்கும் கருணாநிதிக்கும் சகோதரப் பாசமா என்ன? இவனை இன்று எதிர்த்தால் இருவரும் சேர்ந்து நடத்தும் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்தில் வாயைப் பொத்திக் கொண்டு இருக்கவில்லையா? அப்படித்தான், இந்து மதம் இந்தியாவையே ஆளும் இந்தத் தருணத்தில் நமக்குள் அடித்துக் கொள்ளக் கூடாது என்ற தெளிவு அவர்களுக்கு இருக்கிறது. தவிர, தமிழ்நாட்டுக்குள் மட்டும்தான் சிவன் பெரிய கடவுள். ஆந்திரா பார்டரைத் தாண்டினால் இந்தியாவுக்கே ராமன்தான் முழுமுதற் கடவுள். கம்ப்யூட்டரின் Random Access Memory-ஐக் கூட அவர்கள் ’ஹே ராம்’ என்று வணங்குவார்கள். அந்த அளவுக்கு மோசம்! பாபர் மசூதி, சேது சமுத்திரத் திட்டம் போன்றவற்றில் எழுந்த எதிர்ப்பே இதற்கு சான்று. இத்தனை பெரிய சப்போர்ட் அவர்களுக்கு இருக்கும்போது எதற்காக உள்வீட்டில் சண்டை?ஆனால், கமல் போன்றவர்கள் சில சமயம் இந்த விரதத்தை மீறி சைவ - வைணவ லடாயை வெளிச்சம் போட்டுக் காட்டும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. காலம் காலமாக வைணவத்தை வளர்க்க ஆன்மிகவாதிகள் பிறந்து வரும்போது, அவர்களை ஆழ்வார் என்று அடைமொழி தந்து அழைப்பது வழக்கம். இத்தனை காலம் கழித்தும் வைணவத்துக்காக வக்காலத்து வாங்கி நிற்கும் கமலுக்கு தாராளமாக அந்தப் பட்டத்தைத் தரலாம்!அட, அவர் வசிப்பது கூட ஆழ்வார்பேட்டைதானே! (சீரியஸா பதிவு எழுதினாலும் நம்ம புத்தி போக மாட்டேனுது பாருங்க!)

Wednesday, January 12, 2011

கமலஹாசனாழ்வார்!

இந்த காதல் ஞானியையே சீரியஸாக பதிவு எழுத வைத்துவிட்டது ஒரு காமெடிப்படம்!
ஆம்.. அது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு!
இந்தப் படத்தின் ஆடியோவைக் கேட்ட போதே தோன்றிய எண்ணம் இது. எழுத வேண்டும் என்று கை நமநமத்தது. என்னைப் போன்று எழுத்துத் துறையில் இருப்பவர்களின் மிகப் பெரிய சாபக் கேடு, கம்ப்யூட்டர் மானிட்டருக்கு எதிரான கண் வலியும் ஓய்வு நேரங்களில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்தாலே திகட்டுவதும்தான். அதனால் இன்று நாளை என்று தள்ளிக் கொண்டே போனதில் படமே ரிலீஸ் ஆகிவிட்டது. சரி இனி படம் பார்க்காமல் எழுதக் கூடாது என்ற எழுத்து தர்மத்தைக் காரணம் காட்டி இன்னும் சில நாள் சோம்பல் காத்துவிட்டேன். இதோ இப்போது.. படம் பார்த்து இரண்டு வாரங்கள் ஆன பிறகு.. இதற்கென்று நேரம் வாய்த்திருக்கிறது. (என்ன மேட்டர்னே சொல்லாம இவ்வளவு பெரிய மீட்டரா?)

இதுதாங்க மேட்டர்.. கமலின் படைப்புகளில் இப்போது சில காலமாக வைணவ நெடி தூக்கலாக இருக்கிறது கவனித்தீர்களா? காதல் பாடலில் ’பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ என்று திவ்யப் பிரபந்தம் ஏன் வந்தது? கடவுள் இல்லை எனும் கொள்கை உள்ள கமலின் கவிதையில், கவிதை நாயகி (இல்லாத) மகாலட்சுமியிடம் கோரிக்கை வைக்கிறாளே ஏன்?

12ம் நூற்றாண்டில் கடலில் வீசப்பட்ட விஷ்ணு சிலை மேலெழுந்து வருவதற்கும் சுனாமிக்கும் சம்மந்தம் உண்டு என்ற ஆன்மிகக் கருத்தைச் சொல்ல வந்த தசாவதாரத்தை நாத்திகர் கமல் தரவேண்டிய அவசியம் என்ன? (அறிவியல் பூர்வமாக கடலுக்கு அடியில் இருக்கும் அத்தனை பெரிய கல், அலைகளால் கொண்டு வரப்பட்டு கரையில் தள்ளப் பட சாத்தியமே இல்லை!)

ஆக, உண்மையில் கமல் நாத்திகரா அல்லது ’வைணவ மதத்தை’த் தவர வேறெதையும் நம்பாத வைதீக வைணவரா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு விடை காண வேண்டுமானால் (கமல் பாணியிலேயே) குறைந்த பட்சம் 12ம் நூற்றாண்டு வரையிலாவது போக வேண்டும்..

போவோம்.. அடுத்தடுத்த பதிவுகளில்!

Thursday, September 23, 2010

பார் ஆற்றுப்படை - 3

அதாவது,
குடிக்காத நண்பனை பாருக்கு அழைத்துப் போய் (அப்போதுதான் செலவு மிச்சம்!) அவ என்னை விட்டுப் போயிட்டா என்று தன் எட்டாவது ஃபிகரின் இழப்புக்காக ஒருவன் புலம்பும்போது.. அவனை ஆற்றுப்படுத்தும் பாங்கன் கூற்று..

‘’இப்ப நீ கடைசியா என்னதான் சொல்றே..? தண்ணி காட்டிட்டுப் போனது அவ தப்பா? தண்ணி அடிக்கிறது என் தப்பா?”
’’ஃபேஸ்புக்கைப் பார்த்து லவ் பண்றதும் தப்பு..
பேங்க் பாஸ்புக்கைப் பார்த்து லவ் பண்றதும் தப்பு!
நீயும் தப்பு அவளும் தப்பு..
எலுமிச்சம்பழத்தை நக்கிட்டு எழுந்து வாடா எழவெடுத்தவனே!”

Friday, August 13, 2010

பார் ஆற்றுப்படை - 2

மச்சி.. சொல்றேனேனு தப்பா எடுத்துக்காத.. உன்னை மாதிரியே இப்படி தண்ணி அடிச்சுக்கிட்டு, இதே பார்ல.. சைடு டிஷ்ல காரம் இல்லனு சண்டை போடுற ஒருத்தனுக்கு உன் தங்கச்சியைக் கட்டிக் கொடுப்பியா?”
“டேய்!”
‘’பின்ன என்னடா.. இவுரு நினைச்ச நேரத்துக்கெல்லாம் பைக்கை எடுத்துக்கிட்டு ஃபிகர் கூட ஊர் சுத்துவாராம். வாங்குற சம்பளத்துக்கு பொறுப்பா ஒரு வேலை பார்க்க மாட்டாராம். ஆபீஸ்ல ப்யூன் கூட இவுரைக் கேவலமா பார்ப்பானாம்.. அதையெல்லாம் இவுரு கண்டுக்க மாட்டாராம். வாழ்க்கையில இவுரு லவ்வு மட்டும்தான் பண்ணுவாராம்.. வேற ஒரு எளவும் தெரியாதாம். இவுரை நம்பி ஊர்ல இருக்க பொண்ணுங்க எல்லாம் மாட்ன ஜீன்ஸோட மனைவியா வரணுமாம்! டேய்.. ஒரு லெமனை நாக்குல புழிஞ்சுட்டு நீயே நல்லா யோசிச்சுப் பாரு.. உன்னை மாதிரி கேரக்டரை எல்லாம் லவ்தான் பண்ண முடியும். கல்யாணமெல்லாம் பண்ண முடியாது.


’காசுக்காக என்னை விட்டு அவ இன்னொருத்தனைக் கட்டிக்கிட்டா’னு மறுபடியும் பினாத்துனேன்னா மவனே பாட்டிலை இறக்கிடுவேன். காசுதாண்டா..! பொண்னுங்களுக்கு காசுதான் முக்கியம். இங்க மட்டுமில்ல.. உலகம் முழுக்க பொண்ணுங்க காசைத் தேடித்தான் போறாங்க. அது தப்பே இல்ல.. உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்தா, நீ மட்டும், ’மாப்பிள்ளைக்கு என்னா சம்பளம்?’னு வக்கனையா கேள்வி கேக்குற இல்ல..? அதே கேள்விய உன் ஃபிகர் கேட்டா மட்டும் ஏன் கோவம் வருது? 


ஏண்டா நீங்க பொண்ணுங்களுக்கு சம உரிமை குடுக்க மாட்டீங்க. போனா போவட்டும்னு ரிசப்ஷனிஸ்ட்டு, டெலிபோன் ஆபரேட்டர், சேல்ஸ் கேர்ள்னு உங்களுக்கு வாட்டமான வேலையில மட்டும் உக்கார்த்தி வச்சு ’குடுத்துட்டோம்டா சுதந்திரம்’னு கத்துவீங்க. 


அப்படியே பொறுப்பான வேலைக்கு பொண்ணுங்க வந்தாலும், புருஷனா வீட்டுல உக்கார்ந்துக்கிட்டு, ’என்னை விட லேட்டா வர்றா, எனக்கு ஒரு வாய் காபி கொடுக்க ஆளில்ல’னு ஆடுவீங்க! அதனாலயே அவங்களால பொறுப்பான வேலையையெல்லாம் ஒழுங்கா பார்க்க முடியாது!


அப்படியும் ஒரு பொண்ணு ஒழுங்கா வேலை பார்த்து சொந்தக் கால்ல நிக்க நினைச்சா, என் மன்மத ராசா! உங்களை மாதிரிப் பயலுக விடுவீங்களாடா? அவளோட நாத்தம் புடிச்ச துப்பட்டாவை வானவில்னு வர்ணிச்சாச்சும் கரக்ட் பண்ணிட மாட்டீங்க? இப்படி பொண்ணுங்களுக்குனு ஒரு financial அடித்தளமே இல்லாம பண்ணினீங்கன்னா, அவங்க என்னதாண்டா பண்ணுவாங்க? புருஷங்காரன் என்ன பண்றான் என்ன சம்பாதிக்கிறான்றதுலதான் அவங்களுக்குப் பெருமைனு ஒரு நிலைமையை நீங்கதாண்டா உருவாக்கி வச்சிருக்கீங்க. அப்புறம் அவங்க பர்ஸை பார்த்து மனசை மாத்திக்கத்தான் செய்வாங்க. அதுக்கு இப்ப என்னான்ற நீ?”

Wednesday, August 11, 2010

பார் ஆற்றுப்படை..

அதாவது,
குடிக்காத நண்பனை பாருக்கு அழைத்துப் போய் (அப்போதுதான் செலவு மிச்சம்!) அவ என்னை விட்டுப் போயிட்டா என்று தன் எட்டாவது ஃபிகரின் இழப்புக்காக ஒருவன் புலம்பும்போது.. அவனை ஆற்றுப்படுத்தும் பாங்கன் கூற்று..

ஆம்பளைங்க மனசு ரஸகுல்லா மாதிரி..
பொம்பளைங்க மனசு டிராகுல்லா மாதிரிடா மாப்ள!
நாமதான் ஜாக்கிரதையா இருந்துக்கணும்!

வித்தியாசம்..

காதலி தன்னை ஏமாற்றிவிட்ட சோகத்தில் இருந்தான் நண்பன். அவளைக் கொலை செய்யட்டுமா என்றான்..
விடுடா..
ஆம்பளைங்க எப்பவுமே
Broad Minded..
பொண்ணுங்க எப்பவுமே
fraud minded
என்றேன்!

மனிதர்களே..

கொலை வெறியோடு தேடித் திரியும்..
அகப்பட்ட உயிரைப் பிராண்டிச் சாகடிக்கும்..
குத்திக் குதறி உயிர்கிழிக்கும்..
அந்த வேட்டை விலங்கு பூனையை
செல்லப் பிராணி என்கிறீர்கள்..
எலிகளுக்கு எவ்வளவு கோபம் வரும்?

அட மனிதர்களே..

உங்களுக்காக
புலியை செல்லப் பிராணியாக வளர்க்கும் ஓர் ஜீவனை
பரிணாமம் பெற்றெடுக்க வேண்டும்!